×

ரூ.844 கோடியில் கோயில் திருப்பணிகள் ஆன்மிக அரசாக திகழ்கிறது திமுக அரசு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

ஆலங்குளம் தொகுதி பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக) : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 752 கோயில்களுக்கு அந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த அன்னதான திட்டத்தின் கீழ் தற்போது எத்தனை கோயில்கள் பயன்பெறுகின்றன.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: பத்ரகாளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு அன்னதான கூடம் அமைக்கப்பட்டு அன்னதான திட்டத்தின் கீழ் அந்த கோயில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த திட்டம் 754 கோயில்களில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு 75,000 பக்தர்கள் இந்த திட்டத்தின் கீழ் உணவருந்தி கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சி காலத்தில் பழநி, ஸ்ரீரங்கம் என 2 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதல்வர் அந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துகின்ற நோக்கோடு அண்மையில் திருச்செந்தூர், சமயபுரம் மற்றும் திருத்தணி ஆகிய 3 கோயில்களில் தரமான முழு நேர அன்னதான திட்டம் துவக்கப்பட்டது.

பக்தர்கள் பக்தி பசியையும், வயிற்று பசியையும் போக்குகின்ற ஒரு முதல்வர் உண்டென்றால், அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை நிரூபிக்கின்ற வகையில் 2 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த முழு நேர அன்னதான திட்டத்தை 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார். முதல்வர் பொறுப்பேற்ற 7.5.21 தொடங்கி இதுநாள் வரையில் சுமார் 666 கோயில்களில் திருப்பணிகள் ரூ.844 கோடியில் மேற்கொண்டிருக்கின்ற ஒரு ஆன்மிக அரசு, முதல்வர் தலைமையில் அமைந்திருக்கின்ற அரசு என்பதை தெரிவித்து கொள்கிறேன். மேலும் கோயில்களின் திருப்பணிகள் ஏதேனும் மேற்கொள்ள வேண்டியிருந்தால் பட்டியல் தாருங்கள். அவையும் முதல்வர் அனுமதியோடு விரைவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

* பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-பதில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதையடுத்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில், விவாதத்துக்கு பதில் அளித்து வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேசி, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

Tags : DMK government ,Minister ,BK Sekarbabu , Rs 844 crore temple work to be spiritual government DMK government: Minister BK Sekarbabu's speech
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில்...